பெயர்ந்து விழும் சிமெண்டு காரைகள்: மழை பெய்தாலே ஒழுகும் ரேஷன் கடை விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?


பெயர்ந்து விழும் சிமெண்டு காரைகள்: மழை பெய்தாலே ஒழுகும் ரேஷன் கடை விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழை பெய்தாலே ரேஷன் கடை ஒழுகுகிறது. விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்டது கண்டம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக, பொது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை பெறும் வகையில் கடந்த 1999-2000-ம் ஆண்டில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடையை கடந்த 16.7.2001 அன்று அப்போதைய மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடம்

தற்போது இக்கடையின் மூலம் 743 குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த ரேஷன் கடை கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவ்வப்போது பராமரிப்பு செய்யாமல் விட்டுவிட்டனர். இதன் விளைவு தற்போது அக்கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் தற்போது கட்டிடத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரேஷன் கடையின் மேற்கூரை வலுவிழந்துள்ளது. கடைக்குள் பல இடங்களில் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டாற்போல் தெரிகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர், கட்டிடத்திற்குள் ஒழுகுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

இடிந்து விழும் அபாயம்

இந்த கட்டிடத்தை சீரமைக்கவோ அல்லது வேறு புதிய கட்டிடமோ கட்டித்தர வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் கொடுக்க கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எத்தனையோ முறை நடையாய் நடந்து சென்றது கணக்கில் அடங்காது. இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவொரு அதிகாரிகளும், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் அத்தியாவசிய பொருட்கள், மழையில் நனையாமல் பாதுகாக்க, கட்டிடத்தின் மேற்கூரைகளில் தார்பாயை விரித்து வைத்துள்ளனர்.

மேலும் இந்த ரேஷன் கடை கட்டிடம் நாளுக்கு நாள் அதன் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. கடையின் மேற்கூரை கட்டிடம் எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அக்கடைக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள், இக்கடை இப்ப விழுமோ... எப்ப விழுமோ.... என்கிற ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி அக்கடையில் பணியாற்றி வரும் விற்பனையாளர்களும் அச்சத்துடனேயே பணியாற்றி வருகின்றனர்.

புதிய கட்டிடம் கட்டப்படுமா?

மொத்தத்தில் இந்த ரேஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான சூழலில் இருந்து வருகிறது. அவ்வாறு இடிந்து விழுந்தால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்கட்டிடம் இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்போதே விழித்துக்கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி இக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பழுதடைந்த நிலையில்...

இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் கூறுகையில், இந்த ரேஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் கடையில் சென்று பொருட்கள் வாங்கி வர மிகவும் அச்சமாக இருக்கிறது. எந்த நேரத்தில் எது நடக்குமோ என்று பயந்துகொண்டே வீட்டில் இருந்து பொருட்களை வாங்க கடைக்கு வர வேண்டியுள்ளது. இந்த கட்டிடத்தை சீரமைக்கவோ, புதிய கட்டிடம் கட்டித்தரவோ யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தேர்தல் சமயத்தில் ஓட்டு கேட்க வந்ததோடு சரி, அதன் பிறகு யாரும் இங்கு வந்து எட்டிப்பார்க்கவில்லை. மேலும் இந்த ரேஷன் கடை வெகுதூரமாக இருப்பதால் கண்டம்பாக்கம் காலனியில் இருந்து இங்கு பொருட்கள் வாங்க வர வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதுபோல் பொருட்களை வாங்கிக்கொண்டு தலையில் வைத்து சுமந்து வீடு செல்லவும் சிரமமாக இருக்கிறது. எனவே கண்டம்பாக்கம் காலனி பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை கட்டித்தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை

அதேபோல் அக்கிராமத்தை சேர்ந்த கல்பனா கூறும்போது, 1999-ல் கட்டப்பட்ட இந்த ரேஷன் கடை தற்போது மிகவும் சேதமடைந்தும், பழுதடைந்த நிலையிலும் காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் இந்த கடை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இக்கட்டிடத்தை சீரமைக்கவோ, புதிய கட்டிடம் கட்டவோ நடவடிக்கை எடுக்கப்படாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. அதுபோல் மழைக்காலங்களில் தண்ணீர், இக்கடைக்குள் ஒழுகுவதால் பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மழைக்காலத்தின்போது பொருட்கள் வாங்க வரிசையில் நின்றவர்கள் மீது கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கிருந்தவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். ஒரு வேளை அக்கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்திருந்தால் அவர்களின் கதி என்னவாகி இருக்குமோ? அதை நினைத்து பார்த்தால் குலையே நடுங்குது. எப்போது வேண்டுமானாலும் இந்த ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்து வருகிறது. எனவே இக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு விரைவிலேயே புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். இல்லையெனில் கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்றார்.


Next Story