மருதமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்


மருதமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்
x

கோவை மருதமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவை மருதமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கருஞ்சிறுத்தை நடமாட்டம்

கோவை மேற்கு மலைத்தொடர்ச்சியில் காட்டு யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமைகள், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் சில வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவுதேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கோவை மருதமலை வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மருதமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மருதமலை, கெம்பனூர், தடாகம், கணுவாய், அனுவாவி ஆகிய மலை அடிவாரப்பகுதிகளில் கருஞ்சிறுத்தை நடமாடுவது தெரிய வந்துள்ளது.

வனத்துறையினர் எச்சரிக்கை

வன விலங்குகள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் 4 ஆண்டுகளாகவே கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அவ்வப்போது கணுவாய் திருவள்ளுவர் நகர், மருதமலை ஐ.ஓ.பி. காலனியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் கருஞ்சிறுத்தை தென்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை. கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்கள் பீதி

மருதமலை சுற்றுவட்டார வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கருஞ்சிறுத்தையை கண்காணித்து வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story