கோத்தகிரியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
கோத்தகிரியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
கோத்தகிரி
கோத்தகிரி நகர்ப்பகுதி, பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், அலுவலக தேவைகளுக்காகவும் அரசு, மினி பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். ஆனால் கோத்தகிரி நகரின் முக்கிய வீதிகள், சாலைகள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இவை காய்கறி கடைகளில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகளை தின்று சேதப்படுத்தி வருகின்றன. மேலும் கால்நடைகள் சாலையில் படுத்துக் கொண்டு ஓய்வெடுப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதுடன் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருவது வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகளைத் திரிய விடும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு அதிக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அடைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் சட்டமன்ற மனுக்கள் குழுவின் உத்தரவின்படி கோத்தகிரி கடைவீதியில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட தொண்டுபட்டியின் பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.