சுங்குவார் சத்திரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
சுங்குவார் சத்திரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை சுற்றி ஏராளமான தொழில்சாலைகள் உள்ளன. அதை சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் சுங்குவார்சத்திரம் பஜார் வழியாக செல்கின்றன. மேலும் சென்னை, பெங்களூரு, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சுங்குவார் சத்திரம் பஜார் வழியாக பஸ்களும் வந்து செல்கின்றன.
சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் அமைத்தும் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் சாலையின் இருபுறமும் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
சுங்குவார் சத்திரம் பஜார் பகுதி சந்தவேலூர், மொளச்சூர், திருமங்கலம் ஆகிய 3 ஊராட்சிகள் இணைந்து உள்ளன. ஊராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.