தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் குழிகள்-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள குழிகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் தவுட்டுப்பாளையம்- பரமத்தி வேலூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டி தரக்கோரி இரு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக கடந்த 1951-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டது. இதனை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் பக்தவச்சலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதையடுத்து அந்த பாலத்தின் வழியாக ஓசூர், பெங்களூரு, சேலம், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் பகுதிகளில் இருந்து ராமநாதபுரம், ராமேசுவரம், மதுரை, திண்டுக்கல், கரூர், கோவை, ஈரோடு அரவக்குறிச்சி, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அதேபோல் இந்த பகுதிகளில் இருந்து பெங்களூரு, சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.
மற்றொரு பாலம்
இந்தநிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் அருகே பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மற்றொரு பாலம் கட்டப்பட்டது. தற்போது மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, கொடுமுடி பகுதிகளில் இருந்து வரும் அனைத்து பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும் பழைய பாலத்தின் வழியாக செல்கிறது. அதேபோல் பெங்களூரு, ஓசூர், சேலம், நாமக்கல் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் புதிய பாலத்தின் வழியாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போது பழைய பாலம் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக பழைய பாலத்தின் குறுக்கே நெடுகிலும் சுமார் 14 இடங்களில் குழிகள் ஏற்பட்டு உள்ளன.
விபத்து அபாயம்
இதையொட்டி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாக்கு மூலம் குழிகளை அடைத்து அதற்கு மேல் தார் பூசினார்கள். ஆனால் சரியானபடி குழிகளை சீரமைக்காததால் மீண்டும் பழைய பாலத்தில் நெடுகிலும் குழிகள் அகலமாகி பெரிதாக உள்ளன. இதன் காரணமாக பழைய பாலத்தின் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்கின்றன. அப்போது குழிகளில் டயர்கள் வேகமாக படும்போது டயர் வெடித்து பஞ்சராகி விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக மிகவும் மெல்ல செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் சிதலமடைந்து குழிகள் அகலமாகி வருகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய பாலத்தில் ஏற்பட்டுள்ள குழிகளை அடைத்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
வாகன ஓட்டிகள் சிரமம்
காவிரியாற்று பகுதியை சேர்ந்த தர்மராஜ்:- நான் பல்வேறு வேலைகளுக்காக பழைய காவிரி ஆற்று பாலத்தின் வழியாக பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகிறேன். இந்த பாலத்தில் குறுக்கே நெடுகிலும் 14 இடங்களில் பெரிய பெரிய குழியாக இருக்கிறது. இந்த குழிகள் மேலும் அகலமாகி நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் தடுமாறி செல்லும் அளவிற்கு குழிகள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் நெடுகிலும் ஏற்பட்டுள்ள குழிகளை சீரமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
இடுப்பு வலி
தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் மனோகரன்:- தவுட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட வருடங்களாக டீக்கடை நடத்தி வருகிறேன். டீக்கடைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருவதற்கு பழைய காவிரி ஆற்று பாலத்தின் வழியாக பரமத்தி வேலூர் சென்று விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டு வருவேன். ஒவ்வொரு முறையும் இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வரும்போது இடுப்பு வலி ஏற்படுகிறது. இந்த பாலத்தில் நெடுகிலும் குறுக்கே உள்ள குழிகளை சீரமைக்கப்படாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குழியை மேடு, பள்ளம் இல்லாமல் சீரமைக்க வேண்டும்.
வேகமாக வாகனத்தை ஓட்ட முடியாது
டிராவல்ஸ் டிரைவர் மோகன் குமார்:- வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து டிராவல்ஸ் வேனில் சுற்றுலாவிற்கு பொதுமக்களை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். சேலம், ஏற்காடு, ஓசூர், பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தின் வழியாக செல்வது வழக்கம். அதேபோல் நாமக்கல் மாவட்டம், சேலம் மாவட்டத்திற்கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். அப்போது பாலத்திற்கு அருகில் வரும்போது எனக்கு சங்கடமாக இருக்கும். ஏனென்றால் வேகமாக ஓட்ட முடியாது. அதனால் இந்த வழியாக வரக்கூடாது என்று கூட பலமுறை நினைப்பதுண்டு. இந்தப் பாலத்தில் முன்பு சிறிய குழி இருந்தது. நாளுக்கு நாள் பெரிய குழியாக மாறி வருகிறது. இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவது இந்த வழியாகச் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் தான். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்று பாலத்தில் நெடுகிலும் ஏற்பட்டுள்ள குழிகளை தரமான முறையில் சீரமைத்து அனைத்து வாகனங்களும் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோயாளிகள் அவதி
ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன்:- உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு பரமத்தி வேலூர், நாமக்கல் பகுதிகளுக்கு கொண்டு செல்கிறேன். காவிரி ஆற்று பழைய பாலத்தின் வழியாக செல்லும்போது ஆம்புலன்ஸை மெதுவாக ஓட்டி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள். அதேபோல் மெதுவாக போகும்போதே ஆம்புலன்ஸ் டயர் பாலத்தின் நெடுகிலும் உள்ள குழிகளில் பட்டு டயர் வெடித்து விடுகிறது. இதனால் நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. பாலத்தின் நெடுகிலும் குறுக்கே குழிகள் இருப்பதால் எங்களை போன்ற ஆம்புலன்ஸ டிரைவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். ஆபத்தானவர்களை கூட வேகமாக கொண்டு போக முடியாத சூழ்நிலையில் உள்ளது. கர்ப்பிணிகளை இந்த வழியாக அழைத்துச் சென்றால் ஆம்புலன்சிலேயே பிரசவம் ஆகிவிடும் என்ற நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் நெடுகிலும் உள்ள குழிகளை சீரமைத்து வாகனங்கள் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே சைக்கிள் கடை நடத்தி வரும் கேசவன்:-. சைக்கிள் பழுது பார்ப்பதற்கு தேவையான உபகரணங்களை பரமத்திவேலூருக்கு சென்று வாங்கி வருகிறேன். தினமும் இந்த பழைய பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகிறேன். பாலத்தின் நெடுகிலும் குழிகள் இருப்பதால் தட்டு தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. எனவே காவிரி ஆற்று பழைய பாலத்தில் உள்ள குழிகளை சீரமைத்து வாகன ஓட்டிகளுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.