மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; சமையல் மாஸ்டர் பலி
கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் சமையல் மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிப்பாண்டி மகன் முத்துக்குமார் (வயது 28). இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். அவரது சொந்த ஊரில் கோவில் திருவிழா நடைபெறுவதால் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி பகுதியில் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
இதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே வேனில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்துக்குமாருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.