கொடுமுடி அருகே மோட்டார்சைக்கிள்-மொபட் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலி
கொடுமுடி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
கொடுமுடி
கொடுமுடி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
பிளஸ்-2 மாணவர்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள அஞ்சூரை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித் தொழிலாளி. அவருடைய ஒரே மகன் ரோஷன் (17). இவர் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் ரோஷன் நேற்று முன்தினம் மதியம் அஞ்சூரில் இருந்து கணபதிபாளையம் ஒத்தக்கடைக்கு ஆயுத பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார்சைக்கிளை அஞ்சூரை சேர்ந்த அவரது உறவினர் மகன் கபிலன் (19) என்பவர் ஓட்டிச்சென்றார். மோட்டார்சைக்கிளின் பின்னால் ரோஷன் அமர்ந்திருந்தார். வாய்க்கால் செட் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார்சைக்கிளும், எதிரே முதியவர் ஒருவர் ஓட்டி வந்த மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இறந்தார்
இந்த விபத்தில் ரோஷனும், கபிலனும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ரோஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கபிலன் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பள்ளிக்கூட மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.