லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி நண்பர் படுகாயம்
பூந்தமல்லி அருகே முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நசரத்பேட்டை,
திருவள்ளூர் அடுத்த வெள்ளாத்து கோட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 25), இவரது நண்பர் உமாபதி (22), இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் அதற்கான பி.எப். பணத்தை வாங்குவதற்காக நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பின்னால் அமர்ந்து வந்த உமாபதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜெயகுமார் படுகாயமடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் ஜெயகுமாரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து உயிரிழந்த உமாபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக ஹெல்மட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியுங்கள் இல்லை என்றால் இது போல உயிரை இழக்க நேரிடும் என எச்சரித்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (40). இவரும் கனகம்மாசத்திரத்தை சேர்ந்த ரமேஷ் (35) ஆகிய இருவரும் கட்டிட வேலைக்கு மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதூர் அருகே சென்ற போது, எதிரே திருப்பதி நோக்கி சென்ற கார் மோதியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.