குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவுப் பண்டங்கள் தாய்மார்கள் கருத்து
குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவுப் பண்டங்கள் குறித்து தாய்மார்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
நமது வீட்டில் சமைக்கின்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டுவந்த காலம் உண்டு. சாதம், இட்லி, தோசை மட்டுமே பிரதான உணவுகளாக இருந்தன.
சோளம், உளுந்து, பயிறு, கடலை, அரிசி ஏதோ ஒன்றை வறுத்துத் தருவார்கள். மிஞ்சிப் போனால் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் போன்ற நொறுக்குத் தீனிகளை கடைகளில் வாங்கிச் சாப்பிடுவோம். அவை கலப்படம் இல்லாமலும், மண் சார்ந்த உணவுகளாகவும், சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் குறைவில்லாமல் இருந்தன.
ஓட்டல்களுக்கு எப்போதோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் போவது உண்டு. இப்போது நிலைமை அப்படி அல்ல. ஓட்டல்களுக்கு போவது ஒரு நாகரிகமான, கவுரவமான நடைமுறையாகி விட்டது.
மாறிவரும் உணவுப் பழக்கம்
பெரும்பாலான வீடுகளில் சமையல் அறைகள் ஓட்டல்களுக்கு போய்விட்டன. வீடுகள் தங்கும் ஓட்டல்களாக மாறிவருகின்றன. இதனால் பல்வேறு ஒவ்வாமைகள், பிரச்சினைகள் உடல்ரீதியாக நாம் சந்திக்க நேர்கின்றன.
குழந்தைகளும் இயற்கையான உணவை விட்டு செயற்கையாக செய்யப்படும் கவர்ச்சியான உணவு வகைகளையே விரும்புகிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், சாக்லெட், லேஸ் போன்ற தின்பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பிசா, பர்கர் போன்ற ரெடிமேடு உணவு வகைகளுக்கும் அடிமையாகி வருகிறார்கள்.
நாகரிகம் என்ற பெயரால் மாறிவரும் இந்த உணவுப் பழக்கங்களால் ஏற்படுகின்ற சாதக பாதகங்கள் குறித்து குழந்தை மருத்துவர் மற்றும் தாய்மார்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
ஊட்டச்சத்து குறைபாடு
விருத்தாசலம் அல்லிராணி: அதிகப்படியான நொறுக்குத் தீனிகளை உண்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய், பல் சொத்தை உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். கூடுதலாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் நிறைந்த உணவை உட்கொள்வது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு பங்களிக்கும். ஏனெனில் இந்த உணவுகளில் முக்கியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. உணவில் நொறுக்கு, பாஸ்ட் புட் உணவின் அளவைக் கட்டுப்படுத்துவது மற்றும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சீரான உணவை உண்ணுவதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
விளைவுகளை சிந்திப்பதில்லை
நெல்லிக்குப்பத்தை சேர்ந்த இல்லத்தரசி ஷோபனா: கடந்த காலங்களில் அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். அப்போது குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தை சாப்பிடுவதை பார்த்து மற்ற பிள்ளைகளும் வீட்டில் செய்யும் தின்பண்டங்களையே சாப்பிட்டு வந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் பல தனிக்குடித்தனத்தையே விரும்புகின்றனர். வீட்டில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் இருப்பதாலும், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவும், அவர்கள் கேட்ட தின்பண்டங்களையே வாங்கிக் கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகள் விளையாடுவது குறைந்து செல்போன்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அதில் வரும் விளம்பரங்களை பார்த்து நொறுக்கு தீனி கேட்டு அடம் பிடிக்கின்றனர். பெற்றோர்களும் குழந்தைகள் ஆசையாக கேட்டு விட்டார்களே என்று வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிந்திப்பதில்லை.
ஓட்டல்களில் சாப்பிடும் பழக்கம் இல்லை
பெண்ணாடம் அமிர்தவல்லி: எனது மகன், மகள்கள் குழந்தையாக இருக்கும் போது ஊருக்கு ஒரு பெட்டிக் கடை மட்டுமே இருக்கும். அதிலும் தற்போதுள்ள எந்தவொரு தின்பண்டங்களும் கிடையாது. கடைக்கு சென்றாலே கடலை மிட்டாய், பொரி உள்ளிட்டவை தான் இருக்கும். மேலும் பள்ளிக்கூடங்களின் அருகிலும் வெள்ளரிக்காய், மாங்காய், கொய்யாப்பழம், நெல்லிக்காய், பலாப்பழம் உள்ளிட்ட சத்துள்ள பழ வகைகள் தான் விற்கப்படும். ஓட்டல்களில் சாப்பிடும் பழக்கமே கிடையாது. இதனால் பெரும்பாலான கிராமங்களில் ஓட்டல்களே இருந்தது கிடையாது. இதனால் இயற்கை உணவுகளையும், பழங்களையும் வாங்கி சாப்பிட்டதால் எந்தவொரு பக்க விளைவுகளும் வராமல் ஆரோக்கியமாக வளர்ந்தார்கள். மேலும் குழந்தைகள் கையில் பணம் கொடுக்க மாட்டோம். ஆனால் தற்போது பெரும்பாலான படித்தவர்கள் குழந்தைகளை வளர்க்க தெரியாமல் வளர்க்கின்றனர். நொறுக்கு தீனி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இதனால் தான் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே குடல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்.
தொண்டையில் சதை
விருத்தாசலம் டாக்டர் சாதிக் பாஷா: நொறுக்கு தீனிகள், பாக்கெட்டில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை குழந்தைகள் விரும்ப காரணம் அவற்றில் வேதியியல் மூலக்கூறுகளால் செயற்கையான சுவையை ஊட்டுவதால் ஏற்படும் விளைவாகும். இதனால் மீண்டும் மீண்டும் அவற்றை சுவைக்க தூண்டும். அதனாலே குழந்தைகள் அவற்றை அடம் பிடித்து விரும்பி வாங்கி உண்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஒவ்வாமை, உடல் பருமன், மலச்சிக்கல், வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நேரடி மற்றும் மறைமுக பிரச்சினைகள் ஏற்படும். இந்த நொறுக்குத் தீனிகள் ஒரு கட்டத்தில் குழந்தைகளை அதற்கு அடிமை ஆக்கிவிடும். இதனால் அவர்களுடைய உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். நொறுக்குத் தீனியை தவிர்க்க குழந்தைகளை நாம் திறந்த வெளியில் விளையாட வைக்க வேண்டும். பயிர் வகை பயிர்களை சாப்பிட பழக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோமோ?, அதனை தான் குழந்தைகளும் செய்வார்கள். அதனால் கடலை மிட்டாய், எள் மிட்டாய், கடலை மாவு, சிறுதானியங்களால் வீட்டில் செய்யப்பட்ட பலகாரங்களை சாப்பிட பழக்க வேண்டும். பாக்கெட்டுகள், டப்பாக்கலில் செயற்கை முறையில் தயாரித்து வினியோகிக்கப்படும் சுவீட், குளிர்பானங்கள் பல் ஈறுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். தொண்டையில் சதை வளர்ச்சி (டான்ஸில்), உணவுக் குழாயில் பிரச்சினை ஏற்பட்டு நெஞ்செறிச்சல், ஏப்பம், ஆசனவாய் எரிச்சல், ஆசனவாயில் அரிப்பு, மலச்சிக்கல் மற்றும் பல்வேறு மறைமுக பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால் அவற்றையும் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செல்போன்களை பயன்படுத்தும் குழந்தைகள் அதில் வரும் விளம்பரங்களை பார்த்து நொறுக்கு தீனி உண்பதற்கு ஆசைப்படுவார்கள். அதனால் குழந்தைகளுக்கு செல்போன்களை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
பாரம்பரிய உணவுகள்
கடலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி: நொறுக்குத்தீனி தின்பண்டங்கள் ஜங்க் புட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய உணவில் அதிக அளவில் கொழுப்பு சத்தும், அதிக அளவில் உப்பு சத்து மற்றும் சர்க்கரை சத்தும் இருப்பதால் இதை உண்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. நொறுக்குத்தீனி தின்பண்டங்கள் அனைத்தும் பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கிறது. மேலும், அதில் சாயப் பொருட்கள், ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க பதனப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.
இவை அனைத்தும் உடலுக்கு கேடானவை. இதனால் ஏற்படும் பாதிப்புகள் இளம் வயதினிலே ரத்த அழுத்த நோய், இருதய நோய், நீரழிவு நோய் மற்றும் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடல் மற்றும் நரம்பு பாதிப்பும் ஏற்படும். பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயதிற்கு முன்பே பூப்படைந்து விடுகிறார்கள். இதை தடுப்பதற்கு பள்ளி வளாகங்களில் ஜங்க் புட் விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய உணவு வகைகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும். உடனடி உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையான பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்கள் போன்ற உணவுகளை உண்பதால் பாதிப்புகள் இல்லாமல் இருக்கலாம்.