தாய்-மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


தாய்-மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 17 July 2023 10:36 PM IST (Updated: 18 July 2023 12:07 PM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி தற்கொலைக்கு தூண்டிய தாய்-மகன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர்

தாய்-மகன் கைது

திருப்பூரை அடுத்த அவினாசி ராயம்பாளையத்தை சேர்ந்தவர் பரிமளா (வயது 30). இவர் அப்பகுதியை சேர்ந்த துளசிமணி (55) என்பவரிடம் ரூ.27 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வட்டிக்கு பணம் செலுத்தாமல் இருந்ததால் துளசிமணியும், அவருடைய மகன் தனசேகர் (25) ஆகியோர் சேர்ந்து பரிமளாவை சாதிப்பெயரை சொல்லி திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பரிமளா கடந்த 2022-ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சாதிப்பெயரை சொல்லி தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் தாய், மகன் மீது அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. துளசிமணி அவருடைய மகன் தனசேகர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.மனோகரன் ஆஜராகி வாதாடினார்.


Next Story