பஸ்சில் இருந்து குதித்து 5 குழந்தைகளின் தாய் தற்கொலை: சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி உறுதி


பஸ்சில் இருந்து குதித்து 5 குழந்தைகளின் தாய் தற்கொலை: சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி உறுதி
x

பஸ்சில் இருந்து குதித்து 5 குழந்தைகளின் தாய் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்

மதுரை


மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி நாகலட்சுமி (வயது 31). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், நாகலட்சுமி, தன்னுடைய 2 குழந்ைதகளுடன் அரசு பஸ்சில் பெரியார் பஸ் நிலையம் நோக்கி வந்தபோது, ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்னர், நாகலட்சுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டு வழங்க வேண்டும், கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தற்கொலைக்கு தூண்டிய 3 பேர் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி மதுரை அரசு ஆஸ்பத்திரியின் முன்பு போராட்டம் நடந்தது. இதனால், 2 நாட்களாக நாகலட்சுமியின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர்.

இந்தநிலையில் நேற்றும் மதியம் வரை நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை வாங்குவதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கூறுகையில், "நாகலட்சுமி இறப்பு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அவருடைய இறப்புக்கு காரணமான நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவருடைய 5 பெண் குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்து பாதுகாப்பாக வளர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார். அப்போது, தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.


Next Story