கடன் தொல்லையால் தாய்-மகள் தற்கொலை: கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் பால் பண்ணை உரிமையாளர் கைது


கடன் தொல்லையால் தாய்-மகள் தற்கொலை:  கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் பால் பண்ணை உரிமையாளர் கைது
x

வருசநாடு அருகே கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை செய்த வழக்கில் கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் பால் பண்ணை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்

தேனி

தாய்-மகள் தற்கொலை

தேனி மாவட்டம் வருசநாடு அருகே சின்னசாந்திபுரம் கிராமத்தை சேர்ந்த மொக்கை மகள் ஆண்டிச்சியம்மாள். இவரது மகன் கிருஷ்ணகுமார். மகள் காவியா. ஆண்டிச்சியம்மாள் கணவரை பிரிந்து மகள், மகனுடன் சின்னசாந்திபுரத்தில் வசித்து வந்தார். அங்கு பால் பண்ணை வைத்தும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி கடன் தொல்லையால் ஆண்டிச்சியம்மாள் மகள், மகனுக்கு விஷம் கொடுத்து தானும் அதனை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ஆண்டிச்சியம்மாள், அவரது மகள் காவ்யா ஆகிய 2 பேரும் இறந்தனர். மகன் கிருஷ்ணகுமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசில் புகார்

இந்நிலையில் ஆண்டிச்சியம்மாளின் தந்தை மொக்கை வருசநாடு போலீசில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஆண்டிச்சியம்மாள் கீழபூசணூத்து கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் (வயது 29) என்பவரிடம் குடும்ப தேவைக்காக கடன் வாங்கினார். அந்த கடனுக்காக அடைக்கலம் நடத்தி வந்த பால் பண்ணையில் தினந்தோறும் பால் ஊற்றி கடனை அடைத்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடனை முழுவதுமாக அடைத்தார். அதன் பின்பு பால் ஊற்றியதற்கான பணத்தை அடைக்கலத்திடம் அவர் கேட்டார். அப்போது அடைக்கலம், பால் ஊற்றிய தொகை வட்டிக்கு கூட சரியாக இல்லை. எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5½ லட்சத்தை உடனடியாக செலுத்துமாறும், இல்லையென்றால் நிலத்தை எழுதி கொடுக்குமாறும் ஆண்டிச்சியம்மாளிடம் தெரிவித்தார்.

கந்து வட்டி

இதைத்தொடர்ந்து கடன் தொகையை கேட்டு நெருக்கடி அளித்ததால் ஆண்டிச்சியம்மாள் அவருக்கு சொந்தமான நிலத்தை அடைக்கலத்திற்கு எழுதி கொடுத்தார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ஆண்டிச்சியம்மாள் பெற்ற கடனுக்காக அவர் நடத்தி வந்த பால் பண்ணையை தனக்கு எழுதி கொடுக்குமாறும், இல்லையென்றால் வட்டியுடன் சேர்த்து ரூ.5½ லட்சத்தை உடனடியாக செலுத்துமாறும் அடைக்கலம் எனக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

மேலும் கடன் தொகையை செலுத்தாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story