தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு பெண் மற்றும் சிறுமி ஆகியோர் மனு கொடுக்க வந்தனர். அப்போது அந்த பெண் திடீரென பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த டீசலை தன் மீதும், சிறுமி மீதும் ஊற்றினார். பின்னர் 2 பேரும் தீக்குளிக்க முயன்ற போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைவாக செயல்பட்டு 2 பேரையும் மீட்டனர்.
மேலும் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் தண்ணீரை ஊற்றினர். அதையடுத்து அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீக்குளிக்க முயன்றது செங்குறிச்சியை அடுத்த ஆலம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்தராஜின் மனைவி மல்லிகா (வயது 30) மற்றும் அவருடைய 11 வயது மகள் என்பது தெரியவந்தது. மேலும் ஆனந்தராஜ் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல், மல்லிகாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வடமதுரை போலீஸ் நிலையத்தில் மல்லிகா புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மல்லிகா தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது விரக்தியில் தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மல்லிகாவுக்கு, போலீசார் அறிவுரை கூறி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.