பரிசோதனைக்கு அழைத்து வந்த கைதிகள் பெரும்பாலானோர் காயத்துடன்தான் வந்தனர்
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரும் பெரும்பாலான கைதிகள் காயத்துடன்தான் வந்தனர் என்று மதுரை கோர்ட்டில் டாக்டர் வெண்ணிலா சாட்சியம் அளித்துள்ளார்.
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரும் பெரும்பாலான கைதிகள் காயத்துடன்தான் வந்தனர் என்று மதுரை கோர்ட்டில் டாக்டர் வெண்ணிலா சாட்சியம் அளித்துள்ளார்.
சாட்சிகளிடம் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது.
இந்த வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 போலீசார் கைதாகி சிறையில் உள்ளார்கள்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் ஆஜராகி தங்களது சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தின்போது, ஜெயராஜ், பென்னிக்சை போலீஸ்நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் வெண்ணிலா அவர்களை பரிசோதித்தார். பின்னர் அவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடுமையான விமர்சனம்
டாக்டர் வெண்ணிலா, முறையாக அவர்கள் இருவரையும் ஆய்வு செய்யவில்லை என அந்த சமயத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி நாகலட்சுமி முன்பு ஆஜரானார்.
அப்போது, கைதான போலீசார் தரப்பு வக்கீல்கள் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
லத்தியால் தாக்கிய காயம்
இந்த நிலையில் கோர்ட்டில் டாக்டர் வெண்ணிலா அளித்த சாட்சியம் குறித்த தகவல்கள் வருமாறு:-
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து நான் பரிசோதிக்கும்போது அருகில் போலீஸ்காரர்கள் சிலர் இருந்தனர். இதனால் காயங்களை பற்றி முழுமையாக ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் என்னிடம் கூற முடியாமல் போயிருக்கலாம்.
அவர்கள் தங்கள் உடலில் இருக்கும் காயங்களைப்பற்றி தெரிவிக்காததால் அவர்களின் ஆடைகளை அகற்றி உடலில் இருந்த காயங்களை நான் பார்க்க இயலாமல் போய்விட்டது. ஆனால் அவர்களின் உடலில் இருந்த சில காயங்கள் லத்தியால் அடித்ததைப்போல இருந்தது. அதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, அவர்கள் இருவரும் தரையில் புரண்டு அடம் பிடித்தனர். இதனால் சின்னச்சின்ன காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறினர்.
போலீசாரின் தாக்குதல்
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக கைதிகளை அழைத்து வரும் போது, அநேகரிடம் இதைப்போன்ற காயங்கள் இருந்தன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது காயங்களை பற்றி கேட்டால் போலீசார் அடித்ததால் ஏற்பட்டது என்றும் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று டாக்டர் வெண்ணிலா சாட்சி அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.