விசைப்படகுகளில் அதிகம் சிக்கிய கிளாத்தி மீன்கள்


தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் ஆழ்கடலுக்கு சென்று வந்த விசைப்படகு மீனவர்கள் வலையில் கிளாத்தி மீன்கள் அதிகளவில் சிக்கியது. கிலோ ரூ.20-க்கு விற்பனையானதால் மீனவர்கள் கவலையடைந்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்புவது வழக்கம். அவ்வாறு கரை திரும்பும் விசைப்படகுகளில் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் குறிப்பிட்ட கடல் மைல் தூரம் வரை சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரைக்கு திரும்புவர். இதில் சாளை, நெத்திலி, வௌ மீன்கள் பிடிக்கப்படுகிறது. தற்போது ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகுகளில் கிளாத்தி மீன்கள் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற சில விசைப்படகுகள் நேற்று காலையில் கரைக்கு திரும்பின. கரை திரும்பிய விசைப்படகுகளில் அதிகளவில் கிளாத்தி மீன்கள் கிடைத்திருந்தன. பின்னர் அந்த மீன்கள் ஏலக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த மீன்களை கோழி தீவனம் தயாரிப்பதற்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதன்படி காலையில் 1 கிலோ ரூ.20-க்கு விற்பனையான கிளாத்தி மீன்கள், பின்னர் நேரம் செல்ல செல்ல விலை வீழ்ச்சியடைந்து ரூ.16-க்கு விற்பனையானது. அதிகளவில் மீன்கள் கிடைத்தும் விலை வீழ்ச்சி அடைந்ததால் மீனவர்கள் கவலையடைந்தனர்.


Next Story