காலிமனைகளில் தேங்கும் மழைநீரில் உற்பத்தியாகும் கொசுக்கள்


காலிமனைகளில் தேங்கும் மழைநீரில் உற்பத்தியாகும் கொசுக்கள்
x

காலிமனைகளில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

திருச்சி

மாநகராட்சி வார்டுகள்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்டு 65 வார்டுகள் உள்ளன. இந்த 65 வார்டுகளும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு உதவி ஆணையர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளுக்குநாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகரத்தில் குடியிருப்பு பகுதிகளும் அதிகரித்து வருகிறது.

மேலும், நகரை சுற்றியுள்ள காலிமனைகளில் ஏராளமான பிளாட்டுகள் போடப்பட்டுள்ளன. தார் சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி போன்றவை இல்லாத பகுதிகளிலும் கூட புதிய, புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் ஆங்காங்கே கிடக்கும் காலிமனைகளால் தற்போது கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி புதிய வைரஸ் தொற்றுகள் ஏற்பட காரணமாகவும் அமைந்து விடுகிறது.

காய்ச்சல் அதிகரிப்பு

சமீப காலமாக திருச்சி மாநகரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனைகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் குவிந்து வருகிறார்கள்.

பெரும்பாலும் கொசுக்கள் மூலமாகத்தான் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. தற்போது பெய்து வந்த மழையால் மாநகரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிறது. முதிர்ந்த கொசுக்கள் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல்களை உருவாக்கி விடுகின்றன. டெங்கு பாதிப்புக்குள்ளான ஒரு நபரை ஒரு கொசு கடித்துவிட்டு அது மற்றவர்கள் மீது உட்கார்ந்து கடித்தால் அந்த நபருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு விடும்.

சுகாதாரத்தில் கவனம் தேவை

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா என்ற பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த மக்கள் தற்போது தான் சிறிதளவு நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் திடீர், திடீரென ஏற்படும் வைரஸ் காய்ச்சல்களால் என்ன செய்வதென தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாநகரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக காலிமனைகளில் தண்ணீர் தேங்குவதே காரணமாகும்.

காலிமனைகளை விலைக்கு வாங்கிய உரிமையாளர்கள் அதனை முறையாக பராமரிக்காமல் போட்டுவிடுவதால் மழைக்காலங்களில் அதில் தண்ணீர் தேங்கி குட்டைப்போல் மாறிவிடுகிறது. இதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அருகே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் மற்ற பணிகளை விட சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், டெங்கு கொசு பரவாமல் தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.

காலிமனைகளில் தேங்கும் மழைநீர்

இது குறித்து மளிகை கடை வியாபாரி ராஜேந்திரன் கூறுகையில், காலிமனைகளால் தான் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. காலிமனைகளில் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்த உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்ப வேண்டும். அல்லது அந்த மனைகளில் மண்ணை நிரப்பி தேங்கிய தண்ணீரை மூடிவிட்டு மனையின் உரிமையாளரிடம் பின்னர் பணத்தை வசூலிக்க வேண்டும். அப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

இல்லத்தரசி சாந்தி கூறும்போது, கருமண்டபம் நியூஆல்பாநகரில் கொசுத்தொல்லையுடன் சேர்த்து பன்றிகள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. மழைக்காலங்களில் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்ல கஷ்டமாக இருக்கிறது. தெருக்களில் அடிக்கடி கொசுமருந்து அடித்து சுகாதாரமாக வைத்து கொண்டால் தான் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்றார்.


Next Story