தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மூத்த நிர்வாகிகள் 500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசியதாவது:-
நாம் ஆட்சிக்கு வந்தபோது, ஒரு பக்கம் கொரோனா என்ற கொடிய நோய். இன்னொரு பக்கம் நிதிப்பற்றாக்குறை. இதையெல்லாம் சமாளித்து 80 சதவீதத்துக்கு மேல் தேர்தல் நேரத்தில் தந்த உறுதிமொழிகளை காப்பாற்றி இருக்கிறோம். மீதமிருக்கும் 20 சதவீதத்தையும் நான் உறுதியோடு சொல்கிறேன், அதையும் உறுதியாக காப்பாற்றுவான் இந்த 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏதோ உங்களுக்கு பொற்கிழி கொடுத்துவிட்டோம், நீங்கள் சென்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்பதற்காக கொடுக்கவில்லை. இன்னும் பல பணிகளை நீங்கள் செய்யவேண்டும். அதன் மூலமாக நாங்களும் அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். உங்களை ஊக்கப்படுத்துவதற்காகத்தான், உற்சாகப்படுத்துவதற்காகத்தான் பொற்கிழி என்ற பெயரில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவிருக்கிறது. கலைஞர் வழியில் நடைபோடும் இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.