திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே தமிழ்நாடு சத்துணவு- அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதியான வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையான மாதாந்திர ஓய்வுதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், 10 வருடம் பணி முடித்த சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவீதம் முன்னுரிமை அளித்து பணியில் ஈடுபடுத்திட வேண்டும், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலமாக காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலை விடுதலை செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.