இ-சேவை மையம் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது: அமைச்சர் பேட்டி


இ-சேவை மையம் மூலம்  இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது:  அமைச்சர் பேட்டி
x

இ-சேவை மையம் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது என கரூரில், அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.

கரூர்

பேட்டி

கரூரில் நேற்று முன்தினம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மூன்று இலக்குகள்

தகவல் தொழில்நுட்பத்துறை 3 இலக்குகளை கொண்டு செயலாற்றி வருகின்றது. முதலாவதாக மக்களுக்கும் அரசிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து அரசின் திட்டங்கள் அனைத்தும், எளிதில் இணையவழியில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக இ- சேவை மையங்கள் மேம்படுத்தப்பட்டு, மென்பொருள் தரம் உயர்த்தப்பட்டு 200-க்கும் மேற்பட்ட அரசுத்துறை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளன.

2-வதாக காகிதம் இல்லா அலுவலகமாக மின்-அலுவலகம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரசின் கோப்புகளை கையாளுவதில் ஏற்படும் காலதாமதத்தை குறைப்பதுடன் கோப்புகள் பார்க்க வேண்டிய பல்வேறு நிலையிலுள்ள அலுவலர்களும் உடனடியாகவும், அவர்கள் தேவைப்பட்ட நேரத்திலும் கோப்புகளையும், அதிலுள்ள விவரங்களையும் பார்க்க இத்திட்டம் வழிவகை செய்கின்றது.

3-வது இலக்கு தரவுகள் அடிப்படையிலான அரசு. அரசின் பல்வேறு துறைகளில் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்து, எந்த திட்டத்திற்கு எந்த பயனாளிகள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்த்து வழங்குவதாகும். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்போது அரசை தேடி மக்கள் வருகின்ற நிலைமாறி, மக்களைத்தேடி அரசுத்திட்டங்கள் என்ற சூழல் உருவாகும். தகுதியில்லா நபர்களுக்கு தகுதி இல்லாதவர்கள் அதை ஏதாவது ஒரு வழியில் பெற முயற்சிப்பதை முறியடிப்பதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

நல்ல வரவேற்பு

எனவே இந்த மூன்று திட்டங்களையும் தொலைநோக்கு பார்வையாக வைத்து தான் இந்த கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நமது அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கி இருக்கின்றோம். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நாங்கள் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி அல்ல. பயிற்சியை முறையாக பெற்று கொண்டு அதை நடைமுறைப்படுத்துகிறோம். வெகு விரைவில் நாம் டிஜிட்டல் ஸ்டேஷன் அளவில் பணி செய்வோம். எங்கயாவது சிறிய குற்றச்சாட்டு இருந்தால் நீங்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம்.

பல்வேறு துறைகள் கடந்த காலகட்டத்தில் மென்பொருள் தேவைகளை ஐ.டி. துறை மூலம் இல்லாமல் அவர்களாகவே செய்துள்ளார்கள். இதனால் சின்ன சின்ன பிரச்சினைகள் உள்ளது. இப்பொழுது தான் முதல்-அமைச்சர் தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை மூலம் மற்ற துறைகளோடு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story