அய்யப்பன்தாங்கல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது


அய்யப்பன்தாங்கல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
x

அய்யப்பன்தாங்கல் பகுதியில் 100-க்கும் மேற்ட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பணிமனையில் மரம் முறிந்து விழுந்ததால் அரசு பஸ் சேதம் அடைந்தது.

சென்னை

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் மாநகர பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகரின் அனைத்து பகுதிகளுக்கும் 150-க்கும் மேற்பட்ட பஸ்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

'மாண்டஸ்' புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான பஸ்கள் பணிமனை மற்றும் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நள்ளிரவில் வீசிய பலத்த புயல் காற்றால் பணிமனைக்குள் இருந்த மிகப்பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகர பஸ் மீது மரம் விழுந்ததில் அந்த பஸ்சின் பின்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள், மரத்தின் சில பகுதிகளை வெட்டி அகற்றி விட்டு பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பணிமனையில் உள்ள பழுதுபார்க்கும் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர பஸ் பணிமனை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மேலும் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.வி.பி. பார்க் அவென்யூ பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது. இதனையும் ஒன்றியக்குழு தலைவர் பார்வையிட்டார்.

அப்போது ஒன்றியக்குழு துணை தலைவர் உமா மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


Next Story