1,603 மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை
1,603 மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை
புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக 1,603 மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
2-ம் கட்ட தொடக்க விழா
தமிழ்நாடு முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல் கட்டமாக தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என அரசு பெயர் சூட்டியுள்ளது. அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. அதனை தொடர்ந்து நாகை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க விழா நடைபெற்றது.
1,603 மாணவிகளுக்கு ரூ.1000
நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ் தலைமை தாங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ., மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த திட்டம் மூலம் நாகை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்டத்தில் உள்ள 49 கல்லூரிகளில் படிக்கும் 1,603 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சரபோஜி, மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.