பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்


பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
x

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கான பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தலைமையில் இன்று(14.09.2024) தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்களும் பருவமழையின் சவால்களையும், இதனை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளரும் பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்:-

1.பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு அலுவலர்களுக்குமான பேரிடர் மேலாண்மை பணிகள் வரையறுக்கப்பட வேண்டும்.

2.குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

3.சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரெயில் ஆகிய துறைகளின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தரம் முன்னேற்றம் குறித்து, மாவட்ட மற்றும் மண்டல கண்காணிப்பாளர்களை கொண்டு கள ஆய்வு செய்ய வேண்டும். இந்த பகுதிகளில் நடைப்பெற்று வரும் பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும் 15.10.2024-க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

4.வருவாய்த்துறை, காவல்துறை, மீன்வளத்துறையின் அனைத்து முதல் நிலை மீட்பாளர்களின் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அவர்களை பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை பணிகளுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

5.பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள் பருவ மழை தொடங்கும் முன்னரே பாதிப்புகளுக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

6.பருவ மழை தொடங்கும் முன்னரே மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.அனைத்து வானிலை வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில், பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான, பகுதிவாரியான வானிலை தகவல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்கள், காவல்துறைத் தலைவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story