பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க வேண்டும்


பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க  வேண்டும்
x

பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை

அரிமளம் பேரூராட்சி அலுவலகம், போலீஸ் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குரங்குகள் அதிகளவு நின்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை மிரட்டுகின்றது. வாகன ஓட்டிகள் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு எங்கும் செல்ல முடியவில்லை. மோட்டார் சைக்கிளின் முன்பக்க கவரில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு குரங்குகள் ஓடி விடுகின்றன. கவரில் எதுவும் இல்லை என்றாலும் குரங்குகள் பெட்ரோல் டேங்க் மேல் உள்ள கவரை பிடித்து இழுத்து அறுத்தெறிந்து விடுகின்றது. இதனால் பெட்ரோல் டேங்க் கவர்களை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அரிமளத்தை சுற்றி வனப்பகுதி இருப்பதால் இதில் அதிக அளவு தைலமரக்காடுகளே உள்ளன. இதனால் இந்த குரங்குகள் உணவு கிடைக்காமல் ஊருக்குள் புகுந்து விடுகின்றது. சில சமயங்களில் வீடுகளில் கதவு, ஜன்னல் திறந்து கிடந்தால் அதன் வழியே வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றது. சிறிய குடிசையில் கூட புகுந்து அங்கு சமைத்து வைத்திருக்கும் உணவுகளை குரங்குகள் சட்டியோடு தூக்கிக் கொண்டு செல்கின்றன. இதனால் கூலிவேலைக்கு சென்று வீடு திரும்பும் கூலி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் மன வேதனை அடைகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளில் மஞ்சப்பை, பிளாஸ்டிக் பை, வயர் கூடை ஆகியவற்றை கொண்டு சென்றால் அவர்களை பார்த்து குரங்குகள் சீறுகின்றன. இதனால் அவர்கள் கோவில்களுக்கு கூட அர்ச்சனை பொருட்களை பைகளில் வைத்து கொண்டு செல்ல அஞ்சுகின்றனர். உடனடியாக அரிமளம் பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story