தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x

தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஶ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் செயல்படும் நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டுத் தொகைகளை பெற்று, கோடிக்கணக்கில் மோசடி செய்வது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் 3 நிதி நிறுவனங்கள் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம், ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளதாகவும், மூன்று வழக்குகளில் தலைமறைவாக உள்ள 10 பேர் குறித்து தகவல் கொடுத்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

இத்தனை ஆயிரம் கோடி ரூபாயை ஒரே நாளில் மோசடி செய்திருக்க முடியாது. பல ஆண்டுகளாக முதலீட்டுத் தொகையை வசூல் செய்து, பின்னர் முதலீட்டாளர்களை ஏமாற்றி விடுகின்றனர். மாதம் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவோம் என்று வெளியாகும் கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி, பொதுமக்களும் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். முதலீடுகளைப் பெறுவதற்காக முகவர்களையும், பணியாளர்களையும் நியமிக்கும் நிறுவனங்கள், தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் மக்களைக் கவர்கின்றனர்.

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் ரூ.20,000 வட்டி கிடைக்கும் என்று கூறுவதை நம்பி, ஒரு லட்சத்தில் தொடங்கி பல லட்சம் வரை முதலீடு செய்வோருக்கு கடைசியில் கிடைப்பது ஏமாளிப் பட்டம்தான். முதல் 2, 3 மாதங்களுக்கு சரியாக வட்டி வந்துவிடும். பின்னர், பல்வேறு காரணங்களைக் கூறி வட்டி வழங்குவது நிறுத்தப்படும். ஒரு கட்டத்தில் மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு, தலைமறைவாகி விடுகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வழிமுறையைக் கையாண்டாலும், மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெவ்வேறு பெயர்களில் நிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, கோடிக்கணக்கில் முதலீடுகளை வசூலிக்கும் வரை சும்மா இருந்துவிட்டு, மோசடி நடந்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்வதே அரசுக்கும், காவல் துறைக்கும் வாடிக்கையாகி விட்டது. மோசடி நடப்பதற்கு முன்பே தடுக்கத் தவறுவது ஏன்?

மிக அதிக வட்டி தருவதாக அறிவிக்கும்போதே, அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்தால், பல்லாயிரம் கோடி மோசடியைத் தடுத்திருக்கலாம். எனவே, மத்திய, மாநில அரசுகள் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், மோசடிகள் நிகழாமல் தடுக்கவும் இன்னும் கூடுதல் சட்டங்களையும், நெறிமுறைகளையும் அமல்படுத்த வேண்டும். நிதி நிறுவனம் தொடங்க ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவை விதித்துள்ள விதிமுறைகளை, ஒவ்வொரு நிறுவனமும் கடைப்பிடிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

பொதுமக்களும் குறுகிய காலத்தில், அதிக லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையால், நம்ப முடியாத அளவுக்கு வட்டி தருவதாகக் கூறும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். படித்தவர்கள்கூட லட்சக்கணக்கில் ஏமாந்து தவிப்பது வேதனையளிக்கிறது. நமது ஆசைதான், மோசடி செய்பவர்களின் முதலீடு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story