டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரம் திருட்டு

தர்மபுரியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை
தர்மபுரி டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் தெருவில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். நேற்று காலை பொதுமக்கள் அந்த வழியாக சென்றனர். அப்போது டாஸ்மாக் கடையின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் கடைக்கு வந்து பார்த்தனர். அப்போது கடைக்குள் வைத்திருந்த ரூ.32 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடியதும், மதுபாட்டில்களை அவர்கள் திருடி செல்லவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கடையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.