சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.38 லட்சம் மோசடி
ஓசூரில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கொடுப்பதாக கூறி, சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கொடுப்பதாக கூறி, சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினீயர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டைட்டான் டவுன்சிப் துளிர் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ண சர்மா (வயது 45). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த மாதம் 1-ந் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர் பகுதி நேர வேலையாக 'டாஸ்க் கம்ப்ளீட்' என்ற செயலி மூலம் குறைந்த அளவில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள சில இணையதள லிங்குகளையும் அனுப்பியுள்ளார்.
இதை நம்பிய ராமகிருஷ்ண சர்மா அந்த லிங்கில் தன் விவரங்களை குறிப்பிட்டு, 100 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அடுத்த, சில மணி நேரங்களில் இவர் பெயரில் உருவாக்கப்பட்ட கணக்குடன், 1000 ரூபாயாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அந்த செயலி மூலம் எவ்வளவு பணம் போடுகிறீர்கள் என இணையதள பக்கத்துடன் அனுப்பி உள்ளனர். அதில் குறிப்பிட்ட தொகையை கிளிக் செய்து ஆன்லைனில் அனுப்பியவுடன், ராமகிருஷ்ண ஷர்மா கணக்கில் சேர்க்கப்பட்டு, அதற்கான கூடுதல் தொகை இருப்புடன் காட்டியுள்ளது.
போலீசார் விசாரணை
மேலும் நிமிடத்திற்கு நிமிடம் இருப்பு தொகையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தன்னிடம் இருந்த தொகைகளை லிங்கில் மூலம் ராமகிருஷ்ண சர்மா அனுப்பியவாறு இருந்துள்ளார். பிப்ரவரி மாதம் தொடக்கம் முதல், தொடர்ந்து ஒரு வாரத்தில் தன்னிடம் இருந்த மொத்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்று ரூ.37 லட்சத்து 95 ஆயிரத்து 415 ஐ அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் அனுப்பிய இணைய தளம் பக்கம் முடங்கியது. மேலும் இவரிடம் டெலிகிராம், வாட்ஸ் அப்பில் பேசியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ராமகிருஷ்ண சர்மா பெயரில் உருவாக்கப்பட்ட 'டாஸ்க் கம்ப்ளீட்' கணக்கும் முடங்கியது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இந்த பணம் மோசடி குறித்து அவர் நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.