ராணுவ வீரரிடம் ரூ.5.40 லட்சம் மோசடி
திருமணம் செய்து கொள்வதாக கூறி ராணுவ வீரரிடம் ரூ.5.40 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ராணுவ வீரரிடம் ரூ.5.40 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராணுவ வீரர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சீனப்பள்ளி அருகே உள்ள தேவர்குட்டப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). ராணுவ வீரர். இவர் திருமணத்திற்காக பெண் பார்த்து கொண்டு இருந்தார். இதற்காக இணையதளத்திலும் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து பெண் தேடி வந்தார்.
இந்த நிலையில் கார்த்திகாதேவி என்பவர் இணையதளம் மூலம் கார்த்திக்கை தொடர்பு கொண்டார். தகவல் மையம் மூலம் உங்களை தொடர்பு கொண்டதாகவும், உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அந்த பெண் தெரிவித்தார். அப்போது கார்த்திக் அந்த பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார்.
ரூ.5.40 லட்சம் அனுப்பினார்
ஆனால் அந்த பெண் தனது போன் உடைந்து விட்டது. அதனால் போட்டோ அனுப்ப முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து அந்த பெண், கார்த்திக்கிடம் அடிக்கடி பேசி வந்தார். இதையடுத்து அந்த பெண் கார்த்திக்கிடம் நகைகள், செல்போன் வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். அதை நம்பி கார்த்திக்கும், அந்த பெண் கூறிய வங்கி கணக்குகளில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் அந்த பெண், கார்த்திக்குடன் பேசுவதை தவிர்த்தார். மேலும் அவருடைய செல்போன் எண்ணை கார்த்திக் தொடர்பு கொண்ட போது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இந்த மோசடி குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.