பெயிண்டரிடம் ரூ.8¼ லட்சம் மோசடி
லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருள் தருவதாக கூறி பெயிண்டரிடம் ரூ.8¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருள் தருவதாக கூறி பெயிண்டரிடம் ரூ.8¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெயிண்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூரை சேர்ந்தவர் குமார் (வயது 40). பெயிண்டர். கடந்த 2.2.2022 அன்று வாட்ஸ்அப்பில் இவருக்கு வந்த எண் மூலம் ஒருவருடன் நட்பை வளர்த்துக் கொண்டார்.
அப்போது வாட்ஸ்அப்பில் குமாருடன் உரையாடிய அந்த நபர், இவரது பிறந்த நாளுக்காக லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருளை அனுப்புவதாக கூறினார். அந்த பொருளை அனுப்புவதற்கு சுங்க கட்டணம், வெளிநாட்டு கரன்சி மாற்று கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறி உள்ளார்.
ரூ.8.30 லட்சம் அபேஸ்
இதைத் தொடர்ந்து குமார் தனக்கு வாட்ஸ் அப்பில் வந்த 2 செல்போன் எண்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டு கரன்சி மாற்ற கட்டணம், சுங்க கட்டணம் தொடர்பான விவரங்களை கேட்டுள்ளார். பின்னர் அந்த நபர்கள் கூறிய விவரப்படி குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளுக்கு ரூ.8 லட்சத்து 30 ஆயிரத்தை குமார் அனுப்பி வைத்தார்.
இந்த தொகையை பெற்றதும், அந்த நபர்கள் குமாருடன் பேசுவதை தவிர்த்து விட்டனர். மேலும் அவர்களின் செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விலை உயர்ந்த பரிசு பொருள் தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.