வகுப்புவாத கலவரங்கள் மூலம் பா.ஜ.க.வை வளர்க்கலாம் என்ற மோடியின் கனவு நிறைவேறாது -கே.எஸ்.அழகிரி
வகுப்புவாத கலவரங்கள் மூலம் பா.ஜ.க.வை வளர்க்கலாம் என்ற மோடியின் கனவு நிறைவேறாது கே.எஸ்.அழகிரி அறிக்கை.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் மாநிலங்களில் இந்து கோவில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.கோவில் சொத்துகளையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாக பயன்படுத்தி வருகிறது. இது ஒரு அநீதி. சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக உரிமை எழுப்பும் காங்கிரஸ் கட்சி கோவில்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துமா? என்று தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தேவையற்ற சர்ச்சையை எழுப்பியிருக்கிறார். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருப்பதைவிட தமிழகத்தில் கோவில் நிர்வாகம் என்பது இந்துசமய அறநிலையத்துறை என்ற அமைப்பின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1927-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1959-ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழகத்திலுள்ள கோவில்கள் அனைத்தும் அரசுத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம்போட்டு பா.ஜ.க.வை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்த காலத்திலும் நிறைவேறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.