புழல் சிறையில் 2 பெண் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்


புழல் சிறையில் 2 பெண் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
x

புழல் சிறையில் 2 பெண் கைதிகளிடம் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்

சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை பெண் சிறை காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு கொலை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அடைக்கப்பட்டு இருந்த சென்னை ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த கலா(வயது 54) என்பவர் செல்போனில் பேசி கொண்டிருந்தார். அவரை சிறை காவலர்கள் கையும் களவுமாக பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மற்றொரு அறையில் பண மோசடி வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டு இருந்த தாம்பரத்தைச் சேர்ந்த அபிநயா(28) என்பவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து பெண் கைதிகளுக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? இவர்கள் யாருடன் பேசினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று முன்தினம் சிறை காவலர்கள் நடத்திய சோதனையில் பெண் கைதி உள்பட 3 பேரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story