வேலூர் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., மேயர் திடீர் ஆய்வு
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., மேயர் திடீர் ஆய்வு செய்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் கடந்த மாதம் திறந்து வைத்தார். அங்கிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்தில் சில பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முத்துமண்டபம் அருகே வேலூர்- காட்பாடி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் சாலையில் ஒருபுறம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிபடுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. விரைவில் அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தின் முன் பகுதியில் செல்லியம்மன் கோவில் அருகே சிமெண்டு தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதையும் அவர்கள் பார்வையிட்டனர். மேலும் இறுதிகட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.