வேலூர் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
வேலூர்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 29-ந்தேதி திறந்து வைத்தார். பஸ் நிலையத்தில் சில பணிகள் நிறைவடையாததால் அங்கிருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் மட்டும் கடந்த 16-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்தல், பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், கட்டிடத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள மேற்கூரை நிறைவு பணிகள் உள்ளிட்டவை நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, அவற்றின் நிலவரம் குறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, எவ்வித குறைபாடும் இன்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், மாநகராட்சி என்ஜினீயர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.