பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறவில்லை: கரும்பின் விலை வீழ்ச்சி அடையுமா?
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் கரும்பின் விலை வீழ்ச்சி அடையுமா? என கேள்வி எழுந்துள்ளது. அரசு கொள்முதல் செய்து வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரையுடன் 1,000 ரொக்கம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்ட பொருட்களின் தரம் பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இந்த ஆண்டு அரசு சார்பில் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. வருகிற 2-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரும்பு பற்றி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை விவசாயிகள் கூறியதாவது:-
விலை வீழ்ச்சி அடையும்
தனபதி:- ''பொங்கல் பரிசு தொகுப்பு பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1,000 வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கரும்பினையும் அரசு கொள்முதல் செய்து வினியோகிக்க வேண்டும். புதுக்கோட்டையில் செல்லுக்குடி, அன்னவாசல், பொன்னமராவதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு முழு கரும்பாக வினியோகிக்கப்பட்டதால் அரசு சார்பில் கொள்முதல் அதிகம் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை எண்ணிதான் கூடுதலாக கரும்பினை சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது கொள்முதல் செய்யப்படாததால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடையும். எனவே அந்தந்த மாவட்டத்தில் அரசு சார்பில் கரும்பினை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகளவில் கரும்பு சாகுபடி
வீரப்பட்டியை சேர்ந்த விவசாயி குமரேசன்:-
கடந்த 2016-ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுகிறது. 2 அடி முதல் வழங்கப்பட்ட கரும்பு கடந்த ஆண்டு முழு கரும்பாக வழங்கப்பட்டது. இதனால் நாங்கள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்துள்ளோம். இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்த்து எங்களது பகுதியில் பல்வேறு இடங்களில் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லை. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே முழுமையாக விற்பனை செய்ய முடியும். ஆகையால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும்.
பொங்கல் தித்திக்குமா?
சென்னப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயா:- பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகள் விளைவித்த கரும்புகளை அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே எங்களுக்கு இந்த பொங்கல் தித்திக்கும் மகிழ்வான பொங்கலாக அமையும். எனவே அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
ஏமாற்றம் அளிக்கிறது
கருப்பையா:- பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது எங்களை போன்ற விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு விற்பனை
மேட்டுச்சாலையை சேர்ந்த வெள்ளைச்சாமி:- கரும்பு ஓராண்டு கால பயிர். நாங்கள் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்தவுடன் சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா? என்று தெரியவில்லை. தற்போது அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பை தற்போது சாலையோரங்களில் கம்பு கட்டி விற்க தொடங்கியுள்ளோம். மேலும் விவசாயிகள் அனைவரும் பொங்கலுக்கு 2 அல்லது 3 நாட்கள் உள்ள நிலையில் தான் மொத்தமாக அறுவடை செய்வோம்.