9 மாதங்களுக்கு முன்பு மாயமானவர்: வாலிபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது


9 மாதங்களுக்கு முன்பு மாயமானவர்: வாலிபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
x

9 மாதத்திற்கு முன்னர் மாயமான வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவருக்கு நாகவல்லி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாகவல்லி தனது 2 மகள்களுடன் பிரிந்து சென்று சென்னையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இருப்பினும் கணவர் சீனிவாசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

இந்த நிலையில் நாகவல்லி கடந்த 6 மாதத்திற்கு மேலாக செல்போனில் தொடர்பு கொண்ட நிலையில் கணவரின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த நாகவல்லி தனது கணவரை தேடி சீயமங்கலம் கிராமத்திற்கு சென்று பார்த்தபோது அக்கம்பக்கத்தினர் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக சீனிவாசனை காணவில்லை என்று தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தனது கணவர் மாயமானது குறித்து வாலாஜாபாத் போலீசில் நாகவல்லி புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கஞ்சா போதையில் சுற்றிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் வாலாஜாபாத் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் 9 மாதங்களுக்கு முன்னர் மாயமான சீனிவாசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் வழக்கு விசாரணையை தீவிரமாக மேற்கொண்டதில் சீனிவாசன் கடைசியாக வெண்குடியை சேர்ந்த இளையராஜா (25) மற்றும் கிதிரிப்பேட்டையை சேர்ந்த தினேஷ் (24) ஆகியோருடன் சென்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் இளையராஜாவையும் தினேஷையும் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் மாயமான சீனிவாசன் தனது செல்போனை இளையராஜா திருடி கொண்டதாக கூறி அவரது வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார்.

இதன் காரணமாக கடும் கோபமடைந்த இளையராஜா சில நாட்கள் கழித்து சீனிவாசனிடம் நட்பாக பேசி மது குடிக்க அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் இளையராஜா தனது நண்பர் தினேஷ் மற்றும் சீனிவாசனுடன் மது குடித்த போது இளையராஜா, தினேஷ் என்பவருடன் சேர்ந்து சீனிவாசனை சரமாரியாக தாக்கி கொலை செய்து ஊத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் புதைத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் தாசில்தார் சுகபிரியா முன்னிலையில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியட் சீசர், வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார், தடயவியல் துறையினர் மற்றும் டாக்டர் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் அழுகிய உடலை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

இளையராஜா, அவரது தந்தை பாஸ்கர் (50), தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story