தேனியில் பரிதாபம்:மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அண்ணன்- தங்கை பலி
தேனியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அண்ணன்-தங்கை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரவணபிரியா. இந்த தம்பதிக்கு சங்கிலிவேல் (வயது 12) என்ற மகனும், மேகாஸ்ரீ (8) என்ற மகளும் இருந்தனர். கார்த்திகேயன் ஏற்கனவே இறந்துவிட்டார்.
சங்கிலிவேலும், மேகாஸ்ரீயும் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இதற்காக சரவணபிரியா தனது குழந்தைகளுடன் பழனிசெட்டிபட்டியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவருடைய உறவினரான மதுரையை சேர்ந்த இளங்கோவன் மகன் சண்முகவேல் (21) என்பவருடன் மேகாஸ்ரீ, சங்கிலிவேல் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு தேனிக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை சண்முகவேல் ஓட்டி வந்தார்.
விபத்தில் பலி
தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சண்முகவேல் தூக்கி வீசப்பட்டார். மேகாஸ்ரீ, சங்கிலிவேல் ஆகிய இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கினர். சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மேகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சங்கிலிவேல், சண்முகவேல் இருவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கிலிவேல் பரிதாபமாக இறந்தார். சண்முகவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்குப்பதிவு
இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே ராஜமுடியை சேர்ந்த ராமர் (35) என்பவர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் அண்ணன், தங்கை பலியான சம்பவம் அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.