திருமணமான 6 மாதத்தில் பரிதாபம்: ஏ.சி. எந்திரம் வெடித்து விபத்து; புதுமாப்பிள்ளை உடல் கருகி பலி
சென்னை கொளத்தூரில் திருமணமான 6 மாதத்தில் ஏ.சி.எந்திரம் தீப்பிடித்து வெடித்த விபத்தில் புதுமாப்பிள்ளை உடல் கருகி பலியானார்.
திரு.வி.க.நகர்,
சென்னை திரு.வி.க.நகர் வெற்றிநகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் சியாம் (வயது 28). இவர் ஆவின்பால் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் கூட்டுக்குடும்பமாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில், தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சியாம் வீட்டில் உள்ள தனது அறையில் தனியாக ஏ.சி மற்றும் டி.வி.யை ஆன் செய்துவிட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில், திடீரென ஏ.சி. தீப்பிடித்து எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
மாப்பிள்ளை பலி
ஏ.சி. வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மேல் தளத்தில் இருந்து ஓடிவந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற போது, தீக்கொழுந்து விட்டு எரிந்து புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அறைக்குள் செல்ல முடியாமல் அவர்கள் தவித்த நிலையில், இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் திரு.வி.க.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த வாகனங்களில் வந்த செம்பியம் மற்றும் மாதவரம் தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் சென்று புகைமூட்டமான அறைக்குள் புகுந்து சியாமை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால் அதற்குள் அவர் உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.