ஆக்கி போட்டி கோப்பையை அறிமுகம் செய்த அமைச்சர்கள்
ராமநாதபுரத்தில் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோர் வரவேற்று அறிமுகம் செய்து வைத்தனர்.
ராமநாதபுரத்தில் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோர் வரவேற்று அறிமுகம் செய்து வைத்தனர்.
ஆக்கி போட்டி
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர் சாம்பியன் டிராபி ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை வரவேற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு தேசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை வரவேற்று மாவட்ட அளவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பின்பு சென்னையில் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி போட்டி நடைபெறுகிறது.
பல்வேறு நாடுகள் பங்கேற்பு
இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகள் பங்கு பெறுகின்றன. போட்டியில் ஆர்வமுள்ள வீரர்கள் பங்கேற்று வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்று அமைச்சர்கள் பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, எம்.எல்.ஏ.க்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மாவட்ட ஆக்கி சங்க தலைவர் அரவிந்தராஜ், துணைத்தலைவர் சின்னதுரை அப்துல்லா, செயலாளர் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.