சென்னையில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்
சென்னையில் திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சென்னையில் நேற்று முன்தினம் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் மேற்பார்வையில் மழை பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
மழையால் பாதிக்கப்பட்ட புழுதிவாக்கம், மடிப்பாக்கம் சதாசிவம் நகர், குபேரன் நகர் பகுதியில் நடக்கும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது கால்வாய்களுக்கு நடுவே இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய தங்கம் தென்னரசு உறுதியளித்தார். அப்போது சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், தமிழ்நாடு மின் பகிர்மான குழு தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் மணிவண்ணன், 14-வது மண்டல குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜே.கே.மணிகண்டன், சமினா செல்வம், மின்சார வாரிய செயற் பொறியாளர்கள் கீதா, நரேஷ் பாபு, மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், '53 ஆண்டுகளுக்குப்பின் ஜூன் மாதம் சென்னையில் பெய்த 2-வது பெரிய மழை இது. சென்னையில் மழை பாதிப்பு இருந்ததால் முதல்-அமைச்சர் புதிய மழைநீர் வடிகால்வாய்களை பல்வேறு துறைகள் முலமாக கட்டி முடித்து உள்ளார்.
மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் மக்களை படகில் வந்து மீட்க வேண்டிய நிலை இருக்கும். மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை உள்பட பெருங்குடி மண்டலத்தில் ரூ.67 கோடி செலவில் புதிய மழைநீர் வடிகால் வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்கு முன்பே இந்த பணிகள் முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சென்னையில் திடீரென பெய்த கனமழையால் சென்னை, பட்டினப்பாக்கம் துணை மின் நிலையம் பாதிக்கப்பட்டது.
இங்கு ஏற்பட்ட பழுதை, சரிபார்க்கும் பணியை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'சென்னையில் பெய்த திடீர் கனமழையால் 3 துணை மின்சார நிலையங்கள், 49 மின்சார பாதைகள், 51 மின்மாற்றிகள் மற்றும் 27 'பில்லர் பாக்ஸ்'கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போர்கால அடிப்படையில் இரவு, பகல் பாராமல் மழையோடு துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்துக்குள் சீரமைத்து சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டது' என்று கூறினார்.
சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை சார்பில், புளியந்தோப்பு, பென்சனர்ஸ் லேன், வில்லிவாக்கம் அகத்தியர் நகர், மக்காரம் தோட்டம் பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், மண்டல குழு தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், கூ.பி.ஜெயின் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், 'கனமழை பெய்த போதும், அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையால் சென்னை இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது' என்று தெரிவித்தார்.
இதேபோல தென்மேற்கு பருவமழையையொட்டி விருகம்பாக்கம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் பகுதியை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார். சைதாப்பேட்டை பகுதியில் மழை பாதிப்பு இடங்களையும் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.