மக்களின் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருந்து அமைச்சர் பணியாற்றுவேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன் என்று திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன் என்று திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருச்சியில் நடந்த அரசு விழாவில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கடன்கள் தள்ளுபடி
சுயஉதவிக்குழு இயக்கம் தமிழ்நாட்டுக்கான முன்னோடி திட்டமாக மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி அமைந்தபோது, ஏறத்தாழ 16 லட்சம் மகளிர் பயனடையும் வகையில் ரூ.2 ஆயிரத்து 800 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்தது நமது ஆட்சியில் தான்.
பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் காலை உணவு தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல பல அரசின் திட்டங்களை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்கள். சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் திட்டம் 2006-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.
அமைச்சர் பொறுப்பு
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில், அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை கொண்டு மணிமேகலை ஏழை, எளிய மக்களின் பசியை போக்கினார் என்ற கதை உண்டு. அது உண்மையோ, பொய்யோ, இந்த திராவிட மாடல் என்ற அட்சய பாத்திரத்தை கொண்டு ஏழை, எளிய மக்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்காக திட்டங்களை தீட்டி முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டங்களை கடைக்கோடி வரை கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை. உழைத்தால் மட்டுமே வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும் என்பதற்கு நமது முதல்-அமைச்சர் தான் எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டு இருக்கிறார். நீங்கள் அனைவரும் உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசின் பல்வேறு நல திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி தொடர்ந்து உழைத்தால் நீங்களும் வெற்றி பெற போவது உறுதி.
நான் திருச்சிக்கு இளைஞரணி செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் வந்து இருக்கிறேன். அதைவிட பெருமை முதல்-அமைச்சரின் மகனாக வந்து இருக்கிறேன். அதையும்விட பெருமை முத்தமிழறிஞர் கருணாநிதியின் பேரனாக வந்து இருக்கிறேன். ஆனால் அதையெல்லாம்விட பெருமையாக கருதுவது என்றைக்குமே உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருப்பதை தான். தற்போது எனக்கு அமைச்சர் பொறுப்பையும் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். இனி, செல்லப்பிள்ளையாக மட்டுமின்றி பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
2 மணிநேரமாக நின்று மகளிருக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், துணை முதல்-அமைச்சராக இருந்தபோதும், மகளிர் சுயஉதவிக்குழு துறையை என் கைவசம் வைத்து இருந்தேன். தற்போது அது உதயநிதி வசம் கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதியிடம் நான் கேட்டு கொள்வது, இந்த சுயஉதவிக்குழுக்களை மேம்படுத்தும் வகையில் நீங்கள் பாடுபட வேண்டும். அதற்காக பணியாற்ற வேண்டும். சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று அன்பான வேண்டுகோள் வைக்கிறேன்" என்றார். இதனை நிறைவேற்றும் வகையில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களுக்கு மணிமேகலை விருதை, வங்கியாளர்களுக்கான விருது மற்றும் குறிப்பிட்ட சிலருக்கு கடனுதவிகளை வழங்கிவிட்டு மொண்டிப்பட்டி காகிதஆலையில் நடந்த அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து விழா மேடையிலேயே சுமார் 2 மணிநேரமாக நின்று கிட்டத்தட்ட 4 ஆயிரம் மகளிர்சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.