சென்னையில் தாழ்தள மாநகர பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி


சென்னையில் தாழ்தள மாநகர பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
x

சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. ஆனால், 2018க்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், முதலில் தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கு அதிக செலவு ஆவதோடு, தாழ்வான படிக்கட்டுகளால் மழை நீர் எளிதில் புகும் என்பதாலும் குறுகலான சாலைகளில் இயக்குவது சிரமம் என்பதால் இந்த பேருந்துகளை வாங்கவில்லை என்று வாதிடப்பட்டது.

எனினும், தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. குறைந்தபட்சம் 350 பேருந்துகளை இயக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

இந்த நிலையில் சென்னை நகரில் இன்று முதல் தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தாழ்தளப் பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏற வசதியாக தாழ்தளப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீல நிறத்தில் உள்ள இந்த பேருந்தில் சிசிடிவி கேமரா, சார்ஜிங் வசதி, மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story