கும்கி யானைகள் மூலம் அரிக்கொம்பனை பிடிக்க நடவடிக்கை; அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி
கும்கி யானைகள் மூலம் அரிக்கொம்பனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
கம்பத்தில் நகருக்குள் புகுந்த 'அரிக்கொம்பன்' காட்டு யானையை பிடித்து அப்புறப்படுத்த மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
'அரிக்கொம்பன்' காட்டு யானையை கம்பத்தில் இருந்து அகற்றுவதற்கு தமிழக அரசின் சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த யானை இருக்கும் இடத்தை தெரிவு செய்துள்ளோம். 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அவை மூலம் காட்டு யானையை இந்த பகுதியில் இருந்து அகற்றி பாதுகாப்பாக வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைப் பிடிப்பதற்கு முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வருகிற 30-ந்தேதி வரை கம்பத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்கான உத்தரவும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சரும் தேனிக்கு வந்து கொண்டிருக்கிறார். யானையை இங்கிருந்து அப்புறப்படுத்தி எங்கு கொண்டு போவது என்பது தொடர்பாக 2 விதமான கருத்து இருக்கிறது. வனத்துறை அமைச்சருடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யானை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 2 வனத்துறை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.