குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
கிராம சபை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, ஒட்டன்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
இதில் அமைச்சர் அர. சக்கரபாணி பேசுகையில், கரியாம்பட்டியில் ரூ.4 கோடியே 40 லட்சத்தில் 157 வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.25 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. மேலும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.960 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதவிர இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செயல்படுத்த உள்ளார் என்றார்.
தீர்மானங்கள்
பின்னர் டெங்கு கொசுப்புழுவை கட்டுப்படுத்த வேண்டும். குளங்களை பராமரிக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும் பிரதம மந்திரி நீர்பாசன திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தையல் எந்திரம், விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் கருவி, தார்பாய், மண்மாதிரி அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.