தொப்பம்பட்டியில் சமத்துவபுரம் அமைக்கப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
தொப்பம்பட்டியில் சமத்துவபுரம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம்:
தமிழகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பல்வேறு இடங்களில் தொடங்கி வைத்தார். அதன்படி, ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் நடைபெற்ற வேளாண்மை திட்ட தொடக்க விழாவுக்கு, மாவட்ட கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், உளுந்து விதை, கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், வீட்டுத்தோட்ட காய்கறி செடிகள், பழச்செடிகள் கொண்ட தொகுப்பு, வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகள், முதியோர் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக திகழ்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் உழவர் சந்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் சமத்துவபுரம் அமைக்கப்பட உள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே மரிசிலம்புவில் ரூ.100 கோடி மதிப்பில் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தங்கம், வேளாண்மை துணை இயக்குனர் சுருளியப்பன், திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி, பழனி உதவி செயற்பொறியாளர் ராஜா, தொப்பம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து, தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை வேளாண் அலுவலர் தங்கவேல் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.