புரட்டாசி மாதத்தையொட்டி வைணவ கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
புரட்டாசி மாதத்தையொட்டி வைணவ கோவில்களுக்கு சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
புரட்டாசி மாதத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 6 வைணவ கோவில்களை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 4 மண்டலங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், மாமல்லபுரம் சயன பெருமாள், சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் ஆகிய கோவில்கள் இடம் பெற்றுள்ளது.
இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருநீர்மலை நீர்வண்ண பெருமாள், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள், திருவள்ளூர் வைத்திய வீர ராகவபெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்கள் இடம் பெற்றுள்ளது. இது குறித்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன், மதிய உணவும் வழங்கப்படுகிறது.
சனாதன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து கேட்கிறார்கள். அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.