திருவேற்காடு கருமாரியம்மன், சிறுவாபுரி முருகன் கோவில்களில் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை


திருவேற்காடு கருமாரியம்மன், சிறுவாபுரி முருகன் கோவில்களில்  அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
x

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது

சென்னை

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன், சிறுவாபுரி முருகன் கோவில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் மேற்கு கோபுரம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பொங்கல் மண்டபம், முடிக்காணிக்கை மண்டபம், நிர்வாக அலுவலகம், பக்தர்களுக்கான ஓய்வறைகள், வணிக வளாகம், பல்நோக்குகூடம் கட்டுதல், அன்னதானக்கூடம் விரிவாக்கம், சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதானக்கூடம், பக்தர்களுக்கான ஓய்வறைகள், வரிசை மண்டபம் கட்டுதல், கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல், கோவிலுக்கு மாற்றுப்பாதை உருவாக்குதல் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் சி.இசைஅரசன், இணை ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story