திருக்கடையூரில் அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபாடு


திருக்கடையூரில் அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபாடு
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்திபூஜை செய்து வழிபட்டார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவரராக கால சம்ஹார மூர்த்தியும் அருள் பாலித்து வருகின்றனர். சிவன் எமனை காலால் எட்டி உதைத்த தலமான இங்கு பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள்.

இங்கு பக்தர்கள் சஷ்டியப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம் )செய்வது சிறப்பு அம்சமாகும். மேலும் ஆயுள் விருத்திக்காக உக்ரரதசாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள்.

அமைச்சர் வழிபாடு

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு தனது 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை செய்து வழிபட்டார். இதற்கான பூஜைகளை கணேச குருக்கள், மகேஸ்வர குருக்கள் உள்ளிட்டோர் செய்தனர்.

முன்னதாக தருமபுர ஆதீனம் கட்டளை தம்பிரான் சாமி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் மேள தாளங்கள் முழங்க அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் அமைச்சர் சாமி தரிசனம் செய்தார் இதில் அவரது மகன்கள் விக்னேஷ், ஜெயசிம்மன், சேகர்பாபு சகோதரர், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், சரக ஆய்வாளர் பத்திரி நாராயணன் உள்ளிட்டோரும் உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story