தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு


தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு
x

தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு வால்பாறைக்கு சென்றார். அங்கு அவர் சின்குன்றா வனத்துறை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

நேற்று காலை 6 மணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருந்தினர் மாளிகையில் இருந்து சிங்கோனா மலைவாழ் கிராமத்திற்கு சுமார் 14 கி.மீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கி, மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கிராம மக்களுக்கு கம்பளி, பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வு

இதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கேரளாவில் பரவி வரும் நிபா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இருந்து வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழகத்தில் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளது.

3,887 பேருக்கு பரிசோதனை

கேரள-தமிழக எல்லையில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய 6 மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை வளையாறு பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,887 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 6 இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னையில் நாளை (சனிக்கிழமை) சுகாதாரத்துறையினர், மருத்துவ கல்லூரி முதல்வர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் நிபா வைரஸ், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story