நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணியை ஆகஸ்டுக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு


நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணியை ஆகஸ்டுக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணியை ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டு உள்ளார்.

தென்காசி

தென்காசி கலெக்டர் பங்களா இருக்கும் இடத்துக்கு அருகில் புதிதாக சுற்றுலா மாளிகை கட்டப்பட உள்ளது. அந்த இடத்தை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உடன் இருந்தார்.

ஆய்வு கூட்டம்

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மாவட்டம் தோறும் கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி 14 மாவட்டங்களில் இந்த கூட்டம் நடைபெற்று உள்ளது. தென்காசியில் 15-வது மாவட்டமாக இந்த கூட்டம் நடக்கிறது. சாலை விதிகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். விபத்தில் ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்திற்கு பொருளாதார இழப்பு ஏற்படும். இதனால் குடும்பம் நடத்த முடியாது. ஆகையால் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். காவல்துறை, கல்வி, போக்குவரத்து, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை ஆகிய 5 துறைகளும் இணைந்து இதனை செயல்படுத்த வேண்டும்.

சாலை சீரமைப்பதில் அதிக கவனம் தேவை. இப்போது குறைபாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். சாலை அமைக்கும்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை ஆலோசனையுடன் அமைக்க வேண்டும். 22 தொகுதிகள் கொண்ட சென்னையை விட தென்காசி மாவட்டத்தில் விபத்து சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

4 வழிச்சாலை

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:- தென்காசி மாவட்டத்தில் அனைத்து சாலைகளையும் சேர்த்து 1,427 கி.மீ. சாலை உள்ளது. 2021-2022-ம் ஆண்டில் 121 கி.மீ. சாலை பணிகள் 73 பணிகளாக பிரிக்கப்பட்டு ரூ.87 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. 2022-2023-ம் ஆண்டில் ரூ.73 கோடி செலவில் சாலை பணிகள் நடக்கிறது. கிராம சாலை பணிகள் ரூ.49 கோடி செலவிலும், பாலப்பணிகள் ரூ.17 கோடி செலவிலும் நடைபெறுகிறது.

தென்காசியில் இருந்து நெல்லை வரை நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணியை வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் தென்காசி புறவழிச்சாலைக்கு ரூ.13 கோடி செலவில் நில எடுப்பு பணி நடக்கிறது. இந்த பணியும் விரைவில் தொடங்கும். இதேபோன்று சங்கரன்கோவில் புறவழிச்சாலைக்கு ரூ.24 கோடி செலவில் பணிகள் நடைபெற உள்ளன. ராஜபாளையத்தில் இருந்து புளியரை வரை 68 கி.மீ. நான்கு வழிச்சாலை பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்ததும் அந்த பணி தொடங்கப்படும். சாலையில் நடுவில் அமைக்கப்படும் தடுப்புச்சுவரை தவிர இருபுறமும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை விரிவுப்படுத்தப்படும். விரிவாக்க பணியின்போது ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை அகற்றப்படும். முந்தைய அரசு அறிவித்த அறிவிப்புகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். எங்களிடம் கட்சி பாகுபாடு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு பரிசு

பள்ளி மாணவ-மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்கள். ஆட்டோ டிரைவர்கள், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, அரசு முதல்நிலை ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேலு, குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுப்பணிகள் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

----------------------------

தென்காசியில் சுற்றுலா மாளிகை அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தபோது எடுத்த படம். அருகில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.



Next Story