நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் அமைச்சர் நாசர் ஆய்வு


நாமக்கல் மாவட்டத்தில்  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் அமைச்சர் நாசர் ஆய்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பால் குளிரூட்டும் நிலையம், லத்துவாடி கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதியதாக அமைய உள்ள பால்பதன ஆலைக்கான இடம் ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர், எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சின்ராஜ், ராமலிங்கம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தற்போதைய பால் உற்பத்தி மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பால்பதன ஆலை

கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசியதாவது:- பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டதால் நாமக்கல் மாவட்டத்தில் தினசரி விற்பனை 58 ஆயிரம் லிட்டரில் இருந்து 76 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சிறந்த முறையில் செயல்பட்டு லாபம் ஈட்டி வருகிறது. இந்த ஒன்றியத்தில் 510 சங்கங்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 54 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதல் செய்யப்பட்ட பால் தொகை நிலுவையின்றி உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. புதிதாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறனுள்ள பால்பதன ஆலை நிறுவப்பட உள்ளது. அதன் மூலம் பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் முன்னணி மாவட்டமாக நாமக்கல் உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாய கடன்

இதைத்தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு பசுந்தீவன உற்பத்திக்காக தீவன கரணைகளையும், விவசாய கடன் அட்டைகளையும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிக அளவில் பால் வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

பின்னர் நாமக்கல் பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஆவின் பாலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் நவீன சிறப்பு விற்பனை அங்காடியை அமைச்சர் ஆய்வு செய்தார்.

கூட்டுறவு சங்கங்கள்

முன்னதாக நேற்று காலை 6 மணியளவில் நாமக்கல் அருகே முதலைப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் தாலுகா அக்கியம்பட்டியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கவுன்சிலர் சிவக்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், அட்மா குழுத்தலைவர்கள் அசோக்குமார், நவலடி, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் செல்வராஜ், உதவி கலெக்டர் மஞ்சுளா, நாமக்கல் ஆவின் பொதுமேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story