அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உணவு பரிமாறினர்.
பனைக்குளம்,
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உணவு பரிமாறினர்.
காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று முதல் விரிவுபடுத்தப்பட்டது. இதையொட்டி மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இருமேனி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பானிவலசையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவரும் மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.
நிகழ்ச்சியில் நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், திருவாடானை கருமாணிக்கம், பரமக்குடி முருகேசன், ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், துணை தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார், மண்டபம் யூனியன் ஆணையாளர் நடராஜன், இருமேனி ஊராட்சி தலைவர் சிவகுமார், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், புதுமடம் ஊராட்சி தலைவர் காமீர் உசேன், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் இருமேனி முத்து செல்லம், வேதாளை தவுபிக் அலி, நாகாச்சி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
கீழக்கரையில் உள்ள 2 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. மறவர் தெருவில் உள்ள தொடக்கப்பள்ளியில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், கவுன்சிலர் சூரியகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துச்சாமிபுரம் ஊராட்சி தொடக்க பள்ளியில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். வார்டு கவுன்சிலர் காயத்ரி முன்னிலை வகித்தார். இதில், நகராட்சி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, கீழக்கரை தி.மு.க. நகர் துணை செயலாளர் மூர் ஜெய்னுதீன், முன்னாள் நகர் துணை செயலாளர் கென்னடி, கவுன்சிலர்கள் மூர் சப்ராஸ் நவாஸ், முகமது பாதுஷா, சித்திக், பயாஸ்தீன், நசீருதீன், மீரான் அலி, முகமது ஹாஜா சுஹைபு கலந்து கொண்டனர்.
தொண்டி, முதுகுளத்தூர்
தொண்டி பேரூராட்சியில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமை தங்கினார். பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், செயல் அலுவலர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூரில் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி முன்னிலையில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி கவுன்சிலர் கருப்பணன், பேரூராட்சி பணியாளர் ராஜேஷ், மேற்பார்வையாளர் செல்வகுமார், ஆசிரியர் உமா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.